தமிழ் இலக்கியம் | அழகியல் (Aesthetics) என்பது அழகு, கலை, மற்றும் உணர்வுப்பூர்வமான அனுபவங்களை பற்றிய தத்துவப் பகுப்பாய்வாகும். அழகு மற்றும் கலை வெளிப்பாட்டை நாம் எவ்வாறு உணர்கிறோம், விளக்குகிறோம், உணர்ச்சி ரீதியாக எவ்வாறு அவை பிரதிபலிக்கின்றன என்பதும் இதில் அடங்கும்.
நீங்கள் ஒரு திரைப்படத்தை பார்க்கும்போது, அதன் ஒளிப்பதிவு, இசை, கதாபாத்திரங்கள், அவை எல்லாம் சேர்ந்து உங்களை ஒரு தனி உணர்வுக்கு இட்டுச் செல்கின்றதா? அதுவே அழகியல். தமிழ் இலக்கியத்தில் அழகியல் என்பது சங்க இலக்கியம் முதல் நவீன கவிதைகள் வரை பரவலாக காணப்படுகிறது.
இங்கு கூந்தல் அழகியலின் எவ்வாறு இடம்பிடிக்கின்றது?
தமிழ் அழகியலில் கூந்தல் என்பது ஒரு பாரம்பரியக் கலைநயத்தின் பிரதான கூறாகவே கருதப்படுகின்றது. வெறும் உடல் ரீதியான அலங்காரம் மட்டும் அல்ல, மாறாக அழகின் அடையாளம் மற்றும் உணர்ச்சியின் அடுக்கு சின்னமாகும்.
1). பாரம்பரிய நாகரிகத்தின் பிரதிபலிப்பு – கூந்தல் அலங்காரம் என்பது சமூக அடையாளமாகும். பிணையல், பூச்சூட்டல், நீள கூந்தல்… இவை அனைத்தும் ஒரு பெண்ணின் கலாச்சாரம், மற்றும் வாழ்க்கைநிலையை பிரதிபலிக்கின்றன.
2). அழகின் அடையாளம் – சங்க இலக்கியத்தில், கூந்தல் என்பது பெண்களின் அழகையும், இளமையும், காதலையும் வர்ணிக்க அடிக்கடி பயன்படுத்தப்பட்டுள்ளன. “கோவைக்கூந்தல்”, “முல்லைக்கூந்தல்” போன்ற உவமைகள், இயற்கையின் நயத்துடன் கூந்தலை இணைப்பவையாக வர்ணிக்கப்பட்டுள்ளன.
3). உணர்வுப்பூர்வ சின்னம் – காதல், விருப்பம், துக்கம் போன்ற உணர்வுகள் கூந்தலின் வழியாக வெளிப்படுகின்றன. உதாரணமாக, கூந்தலை அவிழ்த்தல் என்பது சில சமயங்களில் துக்கம் அல்லது எதிர்பாராத மாற்றத்தின் சின்னமாகவும் கருதப்படுகின்றது.
தமிழ் இலக்கியத்தில் கூந்தலின் மொழி
தமிழ் இலக்கியத்தில் குறிப்பாக அகநானூறு, குறுந்தொகை, மற்றும் சீவக சிந்தாமணி போன்ற காப்பியங்களில் பெண்களின் கூந்தலானது மிகவும் வளமான கலாச்சார அடையாளமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
1). அகநானூறு – உணர்வும் காதலும்
அகநானூறில் பெண்களின் கூந்தல் அழகு, காதல், மற்றும் உணர்வுப்பூர்வமான உவமைகளால் விவரிக்கப்படுகிறது. உதாரணமாக, களிற்றியானை நிரை பகுதியில் பாடல் 009 மற்றும் பாடல் 092 என்பவற்றில் குறிப்பிடப்படும்;
- “கொடுநுண் ஓதி” – நுண்ணிய முறையில் பின்னப்பட்ட கூந்தல்; நயமிக்க பராமரிப்பின் அடையாளம்.
- “பிடிக் கை அன்ன பின்னகம் தீண்டி” – அன்னப் பறவையின் வால் போல அசைவது; நயம் மற்றும் கவர்ச்சியைக் குறிக்கும்.
- “இருள்மென் கூந்தல்” – இருண்ட, மென்மையான கூந்தல்; மர்மம் மற்றும் காதலின் ஆழம்.

2). குறுந்தொகை – கலாச்சாரமும் திருமண நிலையும்
குறுந்தொகையில் கூந்தலானது பழைய காலத்துல முறைப்படி அமைந்திருந்த திருமண நிலை மற்றும் வாழ்வின் பருவங்களை பிரதிபலிக்கிறது.
- நீள கூந்தல் என்பது மணப்பெண்ணின் அழகு மற்றும் நற்குணத்தின் அடையாளமாகக் கருதப்பட்டது.
- விதவைகள் கூந்தலை அலங்கரிக்காமல் இருப்பது, துக்கம் மற்றும் தனிமையின் சின்னமாகவும் கருதப்பட்டது.
- மணமுள்ள எண்ணெய்கள், மலர்கள் ஆகியவை கூந்தலில் பயன்படுத்தப்படுவது பண்டிகை மற்றும் மகிழ்ச்சியின் குறியீடாக இப்போதும் கருதப்படுகின்றது.
3). சீவக சிந்தாமணி – கூந்தல் அலங்காரங்கள்
இந்த இலக்கியத்தில் பல்வேறு முடி அலங்காரங்கள் மற்றும் சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
- பனிச்சை: பின்னப்பட்ட கூந்தல் – பாரம்பரிய அழகு
- அளகம்: அலங்கரிக்கப்பட்ட முடி – பண்டிகை அல்லது சடங்குகள்
- துஞ்சை: அவிழ்ந்த கூந்தல் – துக்கம் அல்லது தனிமை
- வார்குழல்: பாயும் கூந்தல் – கவிதைநயம் மற்றும் பெண்மை

தமிழ் கலாச்சாரத்தில் பெண்கள் நீளமான, அடர்த்தியான கூந்தலுடன் இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு
அழகாக பராமரிக்கப்பட்ட கூந்தல் என்பது ஒரு குடும்பத்தின் நலமுள்ள வாழ்க்கை நிலையை காட்டும்.“தலைவியின் கூந்தலைப் பார்த்து தலைவன் பணம் சம்பாதிக்க மறந்து போவான்” என்ற வர்ணனை கூட அகநானூறு போன்ற இலக்கியங்களில் காணப்படுகிறது.
தமிழ் கலாச்சாரத்தில் நீளமான, ஆரோக்கியமான கூந்தலை பராமரிப்பது இயற்கை வழிமுறைகளாலாகும். தேங்காய் எண்ணெய், ஆமணக்கு எண்ணெய், நல்லெண்ணெய் ஆகியவற்றை தலையில் மசாஜ் செய்வதால் கூந்தலின் வேர்களை வலுப்படுத்தலாம். பின்னர் சாதம் வடித்த நீரைக் கொண்டு கூந்தலை கழுவுவது பளபளப்பையும் வலிமையையும் தருகிறது. சீயக்காய், வேப்பிலை, செம்பருத்தி போன்ற மூலிகைகள் கூந்தலுக்கு சுத்தத்தையும் வளர்ச்சியையும் தரும். வெந்தயம், தயிர், முருங்கை பொடி போன்றவற்றால் தயாரிக்கப்படும் hair masks ஆழமான ஊட்டச்சத்துகளை வழங்குகின்றன. பச்சை காய்கறிகள், பருப்பு வகைகள், மற்றும் அதிகமாக நீர் குடிக்கும் பழக்கம் கூந்தலின் ஆரோக்கியத்தை உள்ளிருந்து மேம்படுத்துகிறது. இது வெறும் அழகு அல்ல. ஒரு மரபு, ஒரு கலாச்சார பிரதிபலிப்பாக கருதப்படுகின்றது.
பெண், அவளது கூந்தல் ஆரோக்கியத்திற்காக இவ்வாளவு கலாச்சார படிமுறைகள் இருந்தாலும், பிற்போக்கு சிந்தனைகளும் சில உள்ளன. கணவனை இழந்த பெண் தன் கூந்தலை அலங்கரிக்க கூடாது என்ற பழைய கால பின்தங்கிய எண்ணங்கள் இப்போதும் நம்மவர் மத்தியில் பயன்பாட்டிலேயே உள்ளன. கூந்தல் பராமரிப்பு என்பது பெண்களின் நேரம், பணம், மற்றும் ஏனைய தேவைகளின் அடிப்படையில் ஒரு பெண்ணால் அவளது ஆரோக்கியமான கூந்தலுக்காக பின்பற்றப்படும் செயன்முறையாகும். பெண்ணின் தனிப்பட்ட தேர்வின் உரிமை மதிக்கப்பட வேண்டும். தமிழ் கலாச்சாரம், தனது அழகு பார்வைகளை மாற்றும் காலத்தில், பெண்களின் தேர்வுகளுக்கும் இடம் கொடுக்க வேண்டிய அவசியத்தை மறந்துவிடக்கூடாது.
“கூந்தல் என்பது ஒரு உணர்வின் மொழி. அது பேசாமல் பேசும்.”
மேலும் இதுபோன்ற ஆக்கங்களுக்கு எங்கள் வலைத்தளத்தைப் பார்வையிடவும் – snehidi.com