திருமதி கல்பனி சதுரிகா, பொறுப்பாசிரியர் – ஆலோசனை பிரிவு, நியூஸ்டெட் பெண்கள் கல்லூரி, நீர்கொழும்பு
இலங்கைப் பெண்களின் அன்றாட வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்தையும் மாதவிடாய் பிரச்சினை பாதிக்கிறது என்று நீர்கொழும்பு நியூஸ்டெட் பெண்கள் கல்லூரியின் ஆலோசனைப் பிரிவுப் பொறுப்பாளர் திருமதி கல்பனி சதுரிகா கூறுகிறார், இவர் மாதவிடாய் பிரச்சினையின் சுழற்சியை உடைப்பதற்கான முயற்சிகளில் நெருக்கமாக ஈடுபட்டுள்ள ஒரு ஆசிரியர்.
“இலங்கையில் பாடசாலைக்குச் செல்லும் மாணவிகள் தினமும் மாதவிடாய் பிரச்சினையைச் சுற்றியுள்ள தவறான அபிப்பிராயத்தையும் ரகசியத்தையும் எதிர்கொள்கின்றனர், இது அவர்களின் வாழ்க்கையையும் கல்வியையும் பல வழிகளில் பாதிக்கிறது” என அவர் சுட்டிக்காட்டுகிறார்.
Click here to read “Breaking the Silence on Period Poverty in Sri Lanka – a teacher’s perspective“.
மாதவிடாய் பிரச்சினையின் உண்மையான பாதிப்புகள் எப்போதும் பார்க்கப்படுவதில்லை – அது கண்ணுக்குத் தெரியாமல் இருந்தாலும் பள்ளி நாட்களையும், பாடநெறிக்கு அப்பாற்பட்ட செயல்பாடுகளுக்கான அணுகலையும் பாதிப்பதோடு, மாணவிகள் மத்தியில் ஒருவித மனச்சோர்வை ஏற்படுத்துகிறது என்று அவர் கூறுகிறார்.
“ஒவ்வொரு நாளும், ஆசிரியர்கள் வகுப்பறைகளில் இவை நடப்பதைப் பார்க்கிறார்கள். தினசரி வருகை குறைந்து மாணவிகள் பாடங்களைத் தவறவிடுகிறார்கள். அல்லது அவர்கள் அசௌகரியமாக வகுப்பறையில் அமர்ந்திருக்கிறார்கள், பாடங்களில் கவனம் செலுத்த முடியாத நிலையும் ஏற்படுகின்றது. அதற்கு மேல், மாதவிடாய் காலத்தில் பயன்படுத்தப்படும் அத்தியாவசிய பொருட்கள் (சானிட்டரி டவல்கள்) போன்றவற்றை அவர்கள் அணுக முடியாமல் தவிக்கிறார்கள்.“
நமது சமூகத்தில், மாதவிடாய் ஆரோக்கியம் இன்னும் கலாச்சாரத் தடைகளுடன் இணைக்கப்பட்டுள்ளது. இளம் பெண்கள் பல தவறான அபிப்பிராயத்தை எதிர்கொள்கின்றனர், உண்மையில் அவ்வாறான எண்ணங்களை விழிப்புணர்வு மூலம் எளிதில் சமாளிக்க முடியும். பாடசாலைகள், மாணவிகள் மற்றும் மாணவர்கள் இருவருக்கும் மாதவிடாய் ஆரோக்கியத்தை வழக்கமான சுகாதார பாடத்திட்டத்தில் ஒருங்கிணைக்க முடியும் என்றாலும், விழிப்புணர்வு மூலம் மாதவிடாய் பிரச்சனையை வெல்வதே இந்த தவறான அபிப்பிராயத்தை உடைப்பதற்கான திறவுகோலாக உள்ளது.
“கலாச்சாரம் என்ற பெயரில் வெளிப்படையாக பேசப்படாமல் தவிர்க்கப்படும் விடயங்களைப் பற்றிப் பேசுவதை ஊக்குவிக்கும் ஒரு திறந்த உரையாடல் இருக்க வேண்டும். இந்த வழியில், மாணவிகள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் மாதவிடாய் பிரச்சினையை மேம்படுத்துவதற்கான வழிகள் குறித்து ஆரோக்கியமான உரையாடலை நடத்தலாம் மற்றும் இந்த விஷயத்தில் அதிக அறிவைப் பெறலாம்.“
பல ஆசிரியர்களுக்கு, வகுப்பறையில் பார்ப்பதற்கும் உண்மையிலேயே வெளியே உள்ள யதார்த்தம் இளம் மாணவிகளுக்கு பெரும் சிரமமாகவே காணப்படுகின்றது. சில மாணவர்கள் வெளிப்படையாகவே உதவி கேட்கிறார்கள், மற்றவர்கள் அதை முற்றிலுமாகத் தவிர்த்து, தங்கள் சுமைகளை அமைதியாகச் சுமக்கிறார்கள். இன்னும் சிலர் மாதவிடாய் நாட்களில் தங்கள் ஆடைகளில் இரத்தம் படிந்திருப்பதைக் காண பயந்து பள்ளியைத் தவிர்க்கிறார்கள்.
“கல்வி எல்லோருக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படும் சமூகங்களில், பள்ளிகளிலும் சமூகத்திலும் விழிப்புணர்வு மூலம் இந்தக் பேசப்பட முடியாத விடயங்களை எளிதாக சரிசெய்ய முடியும்.“
“மாதவிடாய் மற்றும் மாதவிடாயை இயல்பாக்குதல் என்ற தலைப்பில் சமூகம் அனைவரையும் விவாதங்களுக்கு கொண்டு வர வேண்டும். பள்ளிகள் மற்றும் சமூக மையங்களில் குறைந்த விலையில் சுகாதாரப் பொருட்களை வழங்குவது மற்றொரு தீர்வாகும்.“
விழிப்புணர்வில் சிறுவர்களையும் ஆண்களையும் ஈடுபடுத்துவது மாதவிடாய் “பெண்களுக்கு மட்டும்” என்ற தலைப்பாக இருப்பதற்கு ஒரு முற்றுப்புள்ளியாக அமையும் என்று அவர் நம்புகிறார். தலைப்பு இயல்பாக்கப்படும்போது, மாதவிடாய் காலத்தில் என்ன நடக்கிறது மற்றும் இளம் மாணவிகளுக்கு என்ன ஆதரவு தேவை என்பதைப் புரிந்துகொள்வது குறித்து உரையாடுவது எளிதாக இருக்கும்.
மாதவிடாய் பிரச்சினை என்பது வெறும் சுகாதாரப் பிரச்சினை மட்டுமல்ல. இது பாலின சமத்துவம் மற்றும் மனித உரிமைகள் பற்றிய பிரச்சினை. ஒவ்வொரு பெண்ணும் தனது மாதவிடாய் காலத்தை பாதுகாப்பாகவும் கண்ணியமாகவும் நிர்வகிப்பதற்கான வளங்களும் ஆதரவும் இருப்பதை உறுதி செய்வது நாட்டின் எதிர்காலத்தில் ஒரு முதலீடாகும். தயாரிப்புகள் மற்றும் கல்விக்கான அணுகலை வழங்குவதன் மூலமும், தவறான அபிப்பிராயம் என கருதப்படும் விடயங்களுக்கு சவால்விடுவதன் மூலமும், இயற்கையான ஒரு விடயத்தால், எந்தவொரு பெண்ணின் கல்வியும் தடைபடாது என்பதை இலங்கை உத்தரவாதம் செய்ய முடியும் என்று அவர் முடிவாக மேலும் கூறுகிறார்.
Check “பணியிடத்தில் மாதவிடாய் பிரச்சினை – அதை மேம்படுத்த நாம் என்ன நடவடிக்கைகள் எடுக்கலாம்?“