இன்றைய வேகமான உலகத்தில், வேலை என்பது வெறும் வருமானம் அல்ல. அது ஒருவரின் அடையாளம், மரியாதை, மற்றும் சமூகத்தில் அவருடைய இடத்தை நிர்ணயிக்கும் ஒரு முக்கியமான கூறு. ஆனால், ஒருவர் வேலை தேடுவதில் நீண்ட காலம் வெற்றி காணாமல் இருப்பது, பலருக்குத் தெரியாத சுற்றி இருப்பவர்களால் உணர முடியாத ஒரு ஆழமான மனவலியை ஏற்படுத்துகிறது.
மௌனமாகும் மனம்: வேலை இழப்பினால் ஏற்படும் மனரீதியான பின்விளைவுகள்
ஒருவர் வேலை இழக்கும்போது, முதலில் அவர் இழப்பது வருமானம் ஆகும். ஆனால் அதைவிட ஆழமானது, சுயமரியாதையின் இழப்பு. “நான் ஏன் தேர்ந்தெடுக்கப்படவில்லை?” என்ற கேள்வி, மனதில் இடம் பிடிக்கிறது. இது தன்னம்பிக்கையை குறைத்து , தனிமையை அதிகரித்து அதில் மூழ்கடிக்கச் செய்கிறது.
சமூக ஆராய்ச்சிகள் பின்வருமாறு கூறுகின்றன:
“வேலை இழந்தவர்கள், சமூக உறவுகளிடையே கணிசமான குறை காணும் பண்பினை அனுபவிக்கிறார்கள். இதன்போது சுயமரியாதை குறைவதாகக் கருதுவதால், அவர்கள் தங்களை தனிமையில் அடைத்துக் கொள்கிறார்கள்.”
இந்த வகையான மனநிலையானது, வேலை தேடும் நபரின் உணர்வுப் பிணைப்பு, சமூக உறவுகள், மற்றும் தினசரி செயல்பாடுகள் மீது நேரடியான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. சிலர், தாங்கள் தோல்வியடைந்ததாக கருதி வேலை தேடுவதை நிறுத்தி விடுகிறார்கள். மற்றவர்கள், தங்களை முழுமையாகவே தனிமைப்படுத்துகிறார்கள்.
குடும்பத்திலும் சமூகத்திலும் ஆதரவு இல்லாத சூழ்நிலை
தமிழ் சமூகங்களில், ஒருவருக்கு வேலை இருப்பது என்பது பெரும்பாலும் குடும்பத்தின் பெருமை எனக் கருதப்படுகிறது. வேலை இல்லாத ஒருவரை, பெரும்பாலான சமயங்களில் பொறுப்பற்றவர் எனப் பார்க்கும் மனப்பான்மை உள்ளது. இவ்வாறான பிற்போக்கு சிந்தனைகள் அந்த நபரின் மனநிலையை மேலும் பாதிக்கிறது.
ஆதரவு அளிக்க வேண்டிய குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள், மற்றும் சமூகத்தினர் ஆதரவு அளிக்காமல், விமர்சனம் செய்வதால், வேலை தேடும் நபர் திடீர் என மௌனமாகிறார். அவருடைய வெளிப்படுத்த வேண்டும் என நினைக்கும் கவலை உணர்வுகள் பேசப்படாமல், உள்ளுக்குள் அடக்கப்படுகின்றன. இது, அவர்களுக்கு மன அழுத்தம் மற்றும் மனச்சோர்வை அதிகரிக்கிறது.
மனநலம் மற்றும் உடல்நலம்: வேலை இழப்பின் உடனடி தாக்கங்கள்
நீண்ட காலம் வேலை இல்லாமல் இருப்பது, மன அழுத்தம், மனச்சோர்வு, மற்றும் உடல் சோர்வை ஏற்படுத்துகிறது. தூக்கம் குறைபாடு, உணவுப் பழக்கங்களில் மாற்றம், மற்றும் தனிமை உணர்வு; இவை அனைத்தும் ஒருவரின் முழு வாழ்க்கை தரத்தை பாதிக்கின்றன.
சிலர், தங்களிடம் திறமைகள் குறைவாக இருக்கின்றன என்று நம்பத் தொடங்குகிறார்கள். இது, அவர்கள் வேலை தேடுவதில் மேலும் பின்னடைவை ஏற்படுத்துகிறது. தோல்வியின் பயம், தெரிந்தவர்களின் விமர்சனத்தின் அழுத்தம், மற்றும் சமூக ஒதுக்கீடு; இவை அனைத்தும் அவர்களின் மனநிலையை ஆழமாக பாதிக்கின்றன.
இந்த நிலைமையை சமாளிப்பதற்கான தீர்வுகள் என்ன?
- உணர்வுகளை வெளிப்படுத்தவும், வெளிப்படையாக பேசவும்:
வேலை இழப்பு என்பது தவறு அல்ல. அது வாழ்க்கையின் சிறிய ஒரு படியாக இருக்கலாம். உணர்வுகளை அடக்காமல், நம்பிக்கையுடன் பேச வேண்டும். கூச்சப்படாமல் மனநல ஆலோசகர் அல்லது நம்பகமான நண்பரிடம் மனதை திறந்து பேசுவது, மன அழுத்தத்தை குறைக்கும்.
- புதிய திறன்களை வளர்த்துக்கொள்ளுதல்:
வேலை இல்லாத காலத்தில், புதிய திறன்களை கற்றுக்கொள்ளும் வாய்ப்பு கிடைக்கின்றது. இது தன்னம்பிக்கையை அதிகரிக்கும் ஒரு செயலாகும். ஆன்லைன் பாடநெறிகள், சான்றிதழ் பயிற்சிகள், மற்றும் தானாகவே சில விடயங்களைக் கற்றுக்கொள்ள முடியும்.
- தொழில்முறை உதவியை நாடுங்கள்:
வேலை வழிகாட்டிகள், தொழில் ஆலோசகர்கள், மற்றும் முன்னாள் பணியாளர்கள்; இவர்கள் வழிகாட்டியாக இருக்கலாம். வேலை தேடலில் ஒரு திட்டமிட்ட அணுகுமுறை, மன அழுத்தத்தை குறைக்கும்.
- குடும்பம் மற்றும் நண்பர்கள் ஆதரவு தர வேண்டும்:
வேலை தேடும் நபரிடம் பாசத்துடன் அணுக வேண்டும். விமர்சனம் அல்ல, விழிப்புணர்வும் ஊக்கமும் தேவை. “நீங்கள் இதை சமாளிக்க முடியும்” என்ற வார்த்தைகள், ஒரு நபரின் மனநிலையை மாற்றும் சக்தி கொண்டவை.
நினைவில் வைத்துக்கொள்ளவும்: வேலை இல்லை என்பது ஒரு தோல்வி அல்ல
ஒருவர் வேலையை இழக்கும்போது, அவருடைய மனநிலை, உணர்வுகள், மற்றும் சமூக உறவுகள் மீதும் அது ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும் தான். ஆனால், நாம் இந்த நிலைமையை விழிப்புணர்வுடனும், ஆதரவுடனும், மற்றும் தன்னம்பிக்கையுடனும் எதிர்கொள்ள முடியும்.
தமிழ் சமூகத்தில், வேலை இழப்பை தோல்வியாக பார்க்கும் மனப்பான்மையை மாற்ற வேண்டும். அது ஒரு புதிய தொடக்கமாக பார்க்கப்பட வேண்டும். ஒருவரின் மதிப்பும், மரியாதையும், வேலைவாய்ப்பால் மட்டுமல்ல; அவருடைய மனநிலை, நடத்தை, மற்றும் வாழ்க்கை நோக்கத்தால் நிர்ணயிக்கப்படுகிறது.
தான் வேலையை இழந்து விட்டேன் என்று வருந்தாமல், பின்னடையாமல், அந்த குறிப்பிட்ட இடைவேளையில், காலத்தை சரியாகப் பயன்படுத்தி முன்னேறுவதற்கு முயற்சிக்க வேண்டும். இவ்வாறான படிகளைக் கடந்து சுயமாக பெரிய சாம்ராஜ்யங்களை உருவாக்கியவர்கள் வரலாறும் தமிழ் சமூகத்தில் உள்ளது என்பதை மறந்து விடக்கூடாது.
இது போன்ற இன்னும் பல தகவல்களையும் வேறு பல கருத்துக்களையும் வாசிக்க எமது வலைத்தளத்தைப் பார்வையிடவும். உங்களுடைய வினாக்கள் மற்றும் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்பினால், எங்களுடைய சமூக வலைத்ததளங்களின் ஊடாக எங்களை தொடர்புகொள்ள முடியும்.