அன்பான சிநேகிதி வாசகிகளே,
இந்த மாதம் முதல் நாம் ஒரு முக்கியமான தொடரைத் தொடங்குகிறோம். “Toxic உறவுகளைப் அடையாளம் காண்போம்” என்ற தலைப்பில் ஆறு பாகங்கள் வெளியாகும். ஒவ்வொரு வாரமும் திங்கள், புதன், வெள்ளி ஆகிய நாட்களில் ஒரு பாகம் வெளிவரும். இந்தத் தொடர் பெண்களின் வாழ்க்கையில் அடிக்கடி எழும் ஒரு பிரச்சினையை மையப்படுத்தி எழுதப்பட்டுள்ளது. Toxic உறவுகள் என்றால் என்ன, அவை எப்படி தொடங்குகின்றன, அவற்றை எப்படி கையாள்வது, வெளியேறுவது எப்படி, பிறகு வாழ்க்கையை எப்படி மீண்டும் கட்டமைப்பது என்பது வரை படிப்படியாகப் பேசுவோம்.
இன்று முதல் பாகத்தில் நாம் அடிப்படையைப் பார்க்கிறோம்.
Toxic உறவு என்றால் என்ன, அதை எப்படி ஆரம்பத்திலேயே அடையாளம் காண்வது
இதைத் தெரிந்துகொள்வது மிகவும் முக்கியம். ஏனென்றால், பல சமயம் நாம் உறவுக்குள் ஆழமாகச் சென்ற பிறகுதான் பிரச்சினை தெரியவரும். அதற்குள் மனதளவில் பாதிப்பு ஏற்பட்டிருக்கும். ஆரம்ப அறிகுறிகளை அறிந்திருந்தால், நம்மை நாமே பாதுகாத்துக்கொள்ள முடியும்.
– Toxic உறவு என்றால் என்ன?
எளிமையாகச் சொன்னால், உங்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுப்பதற்குப் பதிலாக துன்பத்தைக் கொடுக்கும் உறவு. இது காதல் உறவாகவோ, திருமண உறவாகவோ, நெருங்கிய நட்பாகவோ கூட இருக்கலாம். இதில் ஒருவர் மற்றவரை தொடர்ரந்து கட்டுப்படுத்த முயல்வார். உங்கள் தன்னம்பிக்கையை குறைப்பார். உங்களை தாழ்வாக உணர வைப்பார். ஆரம்பத்தில் எல்லாம் மிகவும் இனிமையாகவே தோன்றும். அதிக அக்கறை, தொடர்ந்து பேசுவது, உங்களை மட்டுமே நினைப்பது போன்றவை. ஆனால் உறவு கொஞ்சம் ஆழமான பிறகு உண்மையான முகம் வெளியே வரும்.
– ஏன் இவ்வளவு தாமதமாக?
ஏனென்றால், அவர் உங்களை முழுமையாகக் கட்டுப்படுத்த முடியும் என்ற நம்பிக்கை வந்த பிறகுதான் உண்மைக் குணத்தை காட்டுவார்.
இந்த உறவுகள் பெரும்பாலும் ஒரு சுழற்சியில் இயங்கும். முதலில் துன்பப்படுத்துவார்.. வார்த்தையால் அல்லது செயலால். பிறகு மன்னிப்புக் கேட்பார், மிகவும் இனிமையாக நடந்துகொள்வார். நீங்கள் மீண்டும் நம்ப ஆரம்பிப்பீர்கள். பிறகு மீண்டும் அதே தவறு. இந்த சுழற்சி தொடர்ந்து நடக்கும் போது உங்கள் மனநிலை பாதிக்கப்படும். தன்னம்பிக்கை குறையும். மன அழுத்தம் வரும். சில சமயம் உடல் ரீதியான பாதிப்பு கூட ஏற்படலாம்.
– Toxic உறவின் அறிகுறிகள்
இவற்றை ஆரம்பத்திலேயே கவனித்தால் பெரிய பிரச்சினைகளைத் தவிர்க்கலாம்:
- எப்போதும் உங்களை விமர்சிப்பது அல்லது உங்கள் தோற்றம், பேச்சு, செயல்களை தாழ்வாகப் பேசுவது.
- உங்கள் தனிப்பட்ட முடிவுகளில் தலையிடுவது – என்ன உடை அணிவது, யாருடன் பேசுவது, எங்கு செல்வது என எல்லாவற்றையும் கட்டுப்படுத்த முயல்வது.
- அதிகப்படியான பொறாமை – உங்கள் நண்பர்கள், சக ஊழியர்கள், குடும்பத்தினருடனான உறவைத் தடுப்பது.
- உங்களை தனிமைப்படுத்த முயல்வது – நண்பர்களையோ குடும்பத்தையோ சந்திக்க வேண்டாம் என்று சொல்வது.
- உங்கள் போன் அல்லது செய்திகளை தொடர்ந்து சோதனை செய்வது.
- கோபத்தில் அவமானப்படுத்துவது அல்லது அச்சுறுத்துவது.
- மன்னிப்புக் கேட்ட பிறகும் அதே நடத்தையை மீண்டும் காட்டுவது.
- “நான் இல்லாமல் நீ எப்படி இருப்பாய்?” என்று சொல்லி உங்களைப் பயப்படுத்துவது.
இந்த அறிகுறிகளில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்டவை தொடர்ந்து நடந்தால், உடனே யோசியுங்கள். இது வழக்கமான சண்டை அல்ல. இது உங்கள் மன ஆரோக்கியத்தை பாதிக்கும் ஒன்று.
இந்தப் பாகத்தில் நாம் Toxic உறவு என்றால் என்ன, அதன் அடிப்படை அறிகுறிகள் என்ன என்பதைப் பார்த்தோம். அடுத்த பாகத்தில் இந்த உறவுகள் எப்படி தொடங்குகின்றன, ஏன் வெளியேறுவது கடினமாகத் தோன்றுகிறது என்பதை விரிவாகப் பேசுவோம்.
புதன்கிழமை பாகம் 2-ஐ எதிர்பாருங்கள். உங்கள் கருத்துகளை எப்போதும் எதிர்பார்க்கிறோம்.
உங்களுடன்,
சிநேகிதி
(குறிப்பு: இந்தத் தொடர் பொதுவான ஆலோசனைகளை அடிப்படையாகக் கொண்டது. தனிப்பட்ட பிரச்சினைகளுக்கு நிபுணர் உதவி பெறுங்கள்.)
Read More – ‘எக்கோ’ (ekō) திரைப்பட விமர்சனம்: மர்ம மலைப்பகுதியில் ஒரு திகிலூட்டும் பயணம்
