தலைப்புச் செய்திகள் மனதைப் பாதிக்கும்போது
ஊடக விசாரணைகள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களைக் குறை கூறுதல்| இலங்கையில் ஒரு பெண், வன்முறை, எதிர்பாராத அனர்த்தம் அல்லது அதிர்ச்சியை அனுபவிக்கும்போது, அவளுடைய கதை பெரும்பாலும் நீதிமன்ற அறையில் தொடங்குவதில்லை, அது ஊடகங்களில் தொடங்குகிறது. ஒரு சட்டத் தீர்ப்பு வருவதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே, தலைப்புச் செய்திகள், பேச்சு நிகழ்ச்சிகள் மற்றும் கருத்துப் பிரிவுகளால் அவள் மதிப்பிடப்படலாம், பகுப்பாய்வு செய்யப்படலாம், குற்றம் சாட்டப்படலாம். ஊடக விசாரணை என்று அழைக்கப்படும் இந்த நிகழ்வு, பொதுமக்களின் கருத்தை சிதைப்பது மட்டுமல்லாமல், அது உயிர் பிழைத்தவர்களை மீண்டும் மன உளைச்சலுக்கு ஆளாக்கி நீதியை எதிர்பார்க்காத நிலைக்கு ஆளாக்கும்.
தெற்காசியா முழுவதும், குறிப்பாக இலங்கையில், ஊடக விசாரணைகள் ஒரு தவிர்க்கமுடியாத தீர்ப்பு முறையாக மாறியுள்ளன. மேலும் பெண்களுக்கு, இதன் விளைவுகள் மிகவும் தனிப்பட்ட பாதிப்பை ஏற்படுத்தும்.
ஊடக விசாரணை என்றால் என்ன, அது பெண்களுக்கு ஏன் முக்கியமானது?
நீதிமன்றங்கள் தீர்ப்பளிக்கும் முன், ஒரு வழக்கைப் பற்றி பத்திரிகையாளர்கள், Influencers, அல்லது பொதுமக்கள் ஊகிக்கத் தொடங்கும் போது ஊடக விசாரணை ஆரம்பமாகின்றது. குறிப்பாக பாலியல் வன்முறை அல்லது டிஜிட்டல் வன்முறைகள் என்பவற்றில் இருந்து தப்பிய பெண்கள் சம்பந்தப்பட்ட வழக்குகளில், இது பெரும்பாலும் பின்வருவனவற்றிற்கு வழிவகுக்கிறது:
- பாதிக்கப்பட்டவர்களின் அடையாளத்தை வெளிப்படுத்துதல்
- அவர்களது கதாபாத்திர ஆய்வு செய்தல்
- இணைய வழியான தீர்ப்பு
- பொதுவெளியில் அவமானப் படுத்துதல்
“அவளுக்கு என்ன பாதிப்பு ஏற்பட்டது?” என்று கேட்பதற்குப் பதிலாக, கதை பெரும்பாலும் “அது நடக்கும் வரை அவள் என்ன செய்தாள்?” என்று மாறுகிறது. அவளுடைய உடை, அவளுடைய உறவுகள், அவளுடைய டிஜிட்டல் வாழ்க்கை.. அனைத்தும் பொது மக்களின் கருத்து நீதிமன்றத்தில் அநாவசியமான ஆதாரமாகின்றன.
பழி சுமத்துவதற்கு பயன்படுத்தும் மொழி
இலங்கை ஊடகங்கள், குறிப்பாக தமிழ் மற்றும் சிங்கள ஊடகங்கள் , பெரும்பாலும் பெண்களை நுட்பமாகவோ அல்லது வெளிப்படையாகவோ குற்றம் சாட்டும் மொழியைப் பயன்படுத்துகின்றன:
- “அவள் எதற்காக தனியாகச் சென்றாள்.”
- “அவள் தானே புகைப்படத்தை அனுப்பினாள்.”
- “அவள் தானே அவனுடன் தொடர்பு கொண்டிருந்தாள்.”


இந்த சொற்றொடர்கள் வெறும் செய்திகளை வெளியிடுவதில்லை..! அவை குற்றம் சாட்டுகின்றன. குறிப்பாக நெருக்கம், தொழில்நுட்பம் அல்லது சமூகம் சம்பந்தப்பட்ட வழக்குகளில், பெண்களின் வாழ்க்கையையும் நம்பகத்தன்மையையும் கேள்விக்குள்ளாக்கும் கலாச்சார அம்சங்களை அவை வலுப்படுத்துகின்றன.
சட்டப் பாதுகாப்புகள்: இலங்கை சட்டம் என்ன சொல்கிறது?
ஊடக விசாரணை எனும் தீங்கிலிருந்து தப்பிப்பிழைத்தவர்களைப் பாதுகாக்க இலங்கையில் சட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன, ஆனால் அவற்றை அமுலுக்கு கொண்டுவருதல் மற்றும் விழிப்புணர்வில் இடைவெளிகள் உள்ளன.
1. குற்றங்கள் மற்றும் சாட்சிகளில் பாதிக்கப்பட்டோர் பாதுகாப்பு சட்டம் (Assistance to Victims of Crime and Witnesses Act)
இந்தச் சட்டம், குறிப்பாக பாலியல் வன்முறை மற்றும் சைபர் குற்ற வழக்குகளில், பாதிக்கப்பட்டவர்களை இரகசியமாக வைத்திருத்தல் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்தல் என்பவற்றை முக்கியப்படுத்துவதாகும். ஊடகங்கள் வழக்கில் சம்மந்தப்பட்டவர்களின் அடையாளங்களை வெளியிடுவதையோ அல்லது முக்கியமான விவரங்களை வெளியிடுவதையோ தடுக்க நீதிமன்றங்கள் உத்தரவுகளை பிறப்பிக்கலாம்.
2. ஆன்லைன் பாதுகாப்புச் சட்டம் எண். 51, 2023 (Online Safety Act No. 51 of 2023)
இந்தச் சட்டம் பெண்கள்- இணையவழி வன்முறைகள், அவதூறு மற்றும் பாதிப்பை விளைவிக்கும் டிஜிட்டல் உள்ளடக்கத்தைப் புகாரளிக்க அனுமதிக்கிறது. ஆன்லைன் வன்முறைகளில் இருந்து தப்பிப்பிழைப்பவர்களுக்கு இது ஒரு முக்கிய கருவியாகும், ஆனால் பலர் இதை எவ்வாறு பயன்படுத்துவது என்பது பற்றி அறியாமல் இருக்கிறார்கள் மற்றும் புகாரளிப்பதன் பின்னர் ஏற்படக்கூடிய களங்கத்திற்கு அஞ்சுகிறார்கள்.
3. இலங்கை பத்திரிகை கவுன்சில் சட்டம் எண். 5, 1973 (Sri Lanka Press Council Law No. 5 of 1973)
இந்தச் சட்டம் நெறிமுறை பத்திரிகையை ஒழுங்குபடுத்துகிறது. இரகசியத்தை மீறும் அல்லது அவதூறு பரப்பக்கூடிய உள்ளடக்கத்தை வெளியிடும் ஊடகங்களுக்கு எதிராக பாதிக்கப்பட்டவர்கள் புகார்களை அளிக்கலாம், இருப்பினும் இந்த செயல்முறை பெரும்பாலும் மெதுவாகவும் குறைவாகவும் பயன்படுத்தப்படுகிறது.
4. குடிமையியல் அவதூறு சட்டம் (Civil Defamation)
இதன் மூலமாக நற்பெயருக்கு சேதம் விளைத்தவர்களுக்கு எதிராக வழக்குத் தொடரலாம். ஆனால் “குற்றவியல் அவதூறு சட்டம் – Criminal Defamation” 2002 இல் ரத்து செய்யப்பட்டது. சிவில் வழக்குகளுக்கு நேரம் மற்றும் வளங்கள் தேவை. சிவில் வழக்குகளுக்கு எடுக்கும் காலத்தை கருத்தில் கொண்டே பலர் இந்த சட்டத்தைக் கையாள முனைவதில்லை.
நீதிமன்றங்கள் vs பகிரங்கமான கருத்துக்கள்
இலங்கையின் அரசியலமைப்பானது கருத்துச் சுதந்திரத்தைப் பாதுகாக்கிறது, ஆனால் பொது ஒழுங்கு அல்லது தனிப்பட்ட நபரின் கண்ணியம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகும்போது இந்த உரிமை குறைவாகவே உள்ளது. முக்கியமான வழக்குகளில் நீதிமன்றங்கள் ஊடகக் செயற்பாட்டைக் கட்டுப்படுத்துகின்றன, ஆனால் சமூக ஊடகங்கள் பெரும்பாலும் இந்த கட்டுப்பாட்டில் இருந்து தப்பிக்கின்றன.
பெண்களைப் பொறுத்தவரை, அவர்களின் பாதிப்பானது பொதுக் காட்சியாக மாறக்கூடும் என்பதே இதன் அர்த்தமாகும். அவர்களின் கதைகள் சம்மதமின்றிச் சொல்லப்படுகின்றன. அவர்களின் வலி ஒரு இணையத்தில் பதிவிடும் உள்ளடக்கமாக மாறுகின்றது.
உணர்ச்சி ரீதியான பாதிப்பு
ஒரு பெண்ணின் கதை ஊடகங்களால் தவறாகக் கையாளப்படும்போது, அதன் தாக்கம் நற்பெயருக்கும் அப்பாற்பட்டது. அது அவளுடைய பாதுகாப்பு, அவளுடைய மன ஆரோக்கியம் மற்றும் நீதி கோரவேண்டும் என்ற எண்ணத்தையே பாதிக்கிறது. பல பாதிக்கப்பட்டவர்கள் புகார்களைத் திரும்பப் பெறுகிறார்கள் அல்லது சட்ட நடவடிக்கையை முற்றிலுமாகத் தவிர்க்கிறார்கள்; பொதுமக்களின் அவதூறு பேச்சு, தீர்ப்பு அல்லது பழிவாங்கலுக்கு பயப்படுகிறார்கள்.
சில சந்தர்ப்பங்களில், பாதிக்கப்பட்ட பெண்களின் குடும்பத்தினரே, “மக்கள் என்ன சொல்வார்கள்?” என்று கவலைப்படுவதால், வெளியே பேசுவதைத் தடுக்கின்றனர். அந்த பயத்தை உருவாக்குவதில் ஊடகங்களின் பங்கை புறக்கணிக்க முடியாது.

எவ்வாறான விடயங்கள் மாற்றப்பட வேண்டும்
1. பாதிக்கப்பட்டவர்களின் மனநிலையை அறிந்து தகவல் வெளியிடுதல்
பத்திரிகையாளர்கள் உணர்திறன் மிக்கவர்களாக செய்தி வெளியிட பயிற்சி பெற வேண்டும்; அடையாளங்களைப் பாதுகாத்தல், பரபரப்பைத் தவிர்ப்பது மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் கண்ணியத்தை மையப்படுத்துதல் பற்றி தெளிவு இருக்க வேண்டும்.
2. ஊடக பொறுப்பு
பத்திரிகை மன்றங்கள் மற்றும் நெறிமுறை கண்காணிப்பு அமைப்புகள் வழிகாட்டுதல்களை அமல்படுத்த வேண்டும் மற்றும் தனிநபர் கண்ணியத்தை பாதிக்கும் செய்திகளை தண்டிக்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்கள் புகார்களை தாக்கல் செய்ய இலகுவாகவும், இரகசியமாகவும் அணுகக்கூடிய வழிகளைக் கொண்டிருக்க வேண்டும்.
3. சட்ட சீர்திருத்தம்
குறிப்பாக பாலின அடிப்படையிலான வழக்குகளில், செயலில் உள்ள விசாரணைகளின் போது ஊடக நடத்தை குறித்த தெளிவான சட்டங்கள் அவசியம். பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதிமன்றத்தில் மட்டுமல்ல, பொதுவெளிகளிலும் பாதுகாப்பு தேவை.
4. பொது விழிப்புணர்வு
சமூகங்கள் பக்கச்சார்பான கதைகளை எதிர்த்து கேள்வி கேட்கவும், பாதிக்கப்பட்டவர்களை ஆதரிக்கவும், உண்மைத்தன்மையை கோரவும் கற்றுக்கொள்ள வேண்டும். மௌனம் நடுநிலைமை அல்ல, அது உடந்தையாக இருப்பதாகும்.
யாருடைய கதை இங்கு சொல்லப்படுகிறது?
இலங்கையில், ஊடக விசாரணைகள் சட்ட முடிவுகளை மட்டும் பாதிக்காது, அவை வாழ்க்கையையும் பாதிக்கின்றன. பெண்களைப் பொறுத்தவரை பெரும்பாலும் மதிப்பு, பாதுகாப்பு மற்றும் நீதி ஆகியவை கேள்விக்குறியாகின்றன.
நம்மை பாதுகாக்கும் சட்டங்கள் தேவை. தனிநபர் சுதந்திரத்தை மதிக்கும் ஊடகங்கள் தேவை. தீர்ப்பு கொடுக்க வேண்டும் என்பதற்காக அல்லாமல், பச்சாதாபத்துடன் கேள்விகேட்கும் பொதுமக்கள் தேவை.
ஏனெனில் நீதி என்பது நீதிமன்றத்தில் என்ன நடக்கிறது என்பது மட்டுமல்ல.. நீதிமன்றத்தில் தீர்ப்பு வருவதற்கு முன்பு நாம் பெண்களை எப்படி நடத்துகிறோம் என்பதுதான் உண்மையான தர்மமாகும்.
__________________________________________________________
இதன் முதல் பாகத்தை வாசிக்க – “Cyber Threat: நீங்கள் பகிரும் ஒவ்வொரு புகைப்படமும், உங்கள் தனிப்பட்ட தகவல்களை வெளியிடுகிறதா?“