பராமநாதன் புனிதசெல்வி – இறுதி ஆண்டு மாணவி, சட்டத் துறை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்
நுவரெலிய மாவட்டத்தின் கிறேட்வெஸ்ட்றன் தமிழ் வித்தியாலயத்தில், மலையகத்தின் பல்கலைக்கழக மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட மாதவிடாய் விழிப்புணர்வு நிகழ்வின் பின்னர் பின்வரும் முக்கியமான உள்ளடக்கங்களை புனிதசெல்வி எம்முடன் பகிர்ந்துகொண்டார்.

“மாதவிடாய் சுகாதாரம் என்பது ஒவ்வொரு பெண்களின் வாழ்க்கையிலும் மிக முக்கியமான ஒன்று. ஏனென்றால் ஒரு குறிப்பிட்ட வயதிற்கு பின்னர், பெண்கள் பருவம் எய்தியவுடன், அவர்களின் உடலில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் ஒரு குழந்தையை சுமப்பதற்கான, வலிமையைத் தரக்கூடிய இந்த மாதவிடாய் என்பது சாதாரணமான ஒன்றாக அமையாது. அதன்போது, பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் மற்றும் சவால்கள் ஏராளம். அவற்றைத் தகர்த்து, பெண்களாகிய நாங்கள் எப்போதும், முன்னோக்கி செல்ல வேண்டும். மாதவிடாய் என்பது ஒரு தடை அல்ல.
மாதவிடாய் சுகாதாரத்தில் கவனம் செலுத்துவோமாக இருந்தால், அது வாழ்க்கையில் அனைத்து செயல்பாடுகளிலும், சிறந்த பெறுபேறுகளைத் தரும். உதாரணமாக, இன்று எனக்கு மாதவிடாய் என்றால் நான் அதற்கேற்ற முன் ஆயத்தங்களை செய்தல் வேண்டும், அது உடலியல் ரீதியாகவும் மன ரீதியாகவும் வேண்டும். அவ்வாறு இருக்கும் பட்சத்தில் எமக்கு இந்த மாதவிடாய் சுகாதாரத்தை, தைரியத்துடன் சமாளிக்க முடியும்.
மாதவிடாய் சுகாதாரம் என்பது, மேலைத்தேய நாடுகளுடன், ஒப்பிடும்போது எம்முடைய, இலங்கை போன்ற கலாச்சாரத்தை பேணுகின்ற நாடுகளில் விழிப்புணர்வு என்பது சற்று இறுக்கமாகவே உள்ளது. அதற்கான காரணம் எங்களுடைய கலாச்சாரம், சமய மற்றும் மூடநம்பிக்கைகள் எனலாம்.
உதாரணமாக இன்றும் கூட எமது பிரதேசத்திலுள்ள பெண்களுக்கு Menstrual Cup என்பது தொடர்பான அதனை பாவிப்பது மற்றும் இவ்வாறான ஒரு மாதவிடாய் சுகாதாரப் பொருள் இருப்பது என்பது தெரியாத ஒரு விடயமாகவுள்ளது.
எம்முடைய மூதாதையர்களால் கடத்தப்பட்ட சில விடயங்கள் ஐதீகங்கள் சுகாதாரத்திற்கு உகந்தவையாக இருந்தாலும் பல நேரங்களில் அவை மருத்துவத்திற்கு எதிரானதாகவே காணப்படுகின்றது. உதாரணம் மாதவிடாய் காலங்களில் தலையை குளிக்கக்கூடாது என கூறுவார்கள் முதியவர்கள். ஆனால், அப்படி குளிக்காமல் இருப்பது என்பது தகாது என மருத்துவம் கூறுகிறது மற்றும் கட்டாயமாக குளிக்க வேண்டும் என மருத்துவம் கூறுகின்றது.
ஆகவே, இந்த முரண்பாடு, எம்முடைய சமூகத்தில் செல்வாக்கு செலுத்துகின்றது. அதனால், எம்முடைய சமூகத்தில் இளம் தலைமுறையினர் தொடக்கம் முதியவர்கள் வரை மாதவிடாய் தொடர்பான விழிப்புணர்வு அவசியமாகவுள்ளது. இவ்வாறான சில கட்டுக்கதைகளை உடைப்பதன் மூலம் எமது சமூகத்தில் சமத்துவமான சூழலை ஏற்ப்படுத்த வேண்டும். உதாரணமாக, பாடசாலைகளில் சக நண்பர்களாக இருக்கின்ற சமூகத்தினால் ஒரு பெண் மாணவிக்கு மாதவிடாயின் போது உதவ முடியுமாக இருந்தால் அதுவே சமத்துவம். இரு பாலாருக்கும், மாதவிடாய் சுகாதாரம் தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்துவது என்பது எமது அத்தியாவசியமாகும்.


மாதவிடாய் சுகாதாரம் என்பது தொடர்பாக பெற்றோர்களின் பங்களிப்பு மிகப்பெரியதாகும். ஒரு பெண் பிள்ளை எவ்வளவு தூரம், தன்னுடைய பெற்றோரிடம் குறிப்பாக, தாய், தந்தையுடன், அந்நியோன்யமாக இருந்தாலும் கூட, மாதவிடாய் தொடர்பான விடயங்களை பகிராத போது, அங்கு சிறந்த தொடர்பு என்பது, கேள்விக்குறியே. அது மட்டுமன்றி பெண்கள் சார்ந்த அனைத்து சமூகத்தினருக்கும் கொடுத்தல் வேண்டும். கடந்த சில நாட்களுக்கு முன்னால் ஒரு பாடசாலையில் நடந்த சம்பவமானது, நாங்கள் பெண்கள் பயன்படுத்தும் மாதவிடாய் சுகாதாரப் பொருளான pad ஒன்றை ஆண் மாணவர்களிடம் தந்த போது ஆண் மாணவர்கள் தூக்கி எறிந்ததுடன், கூச்சத்துடன் சிரிப்புடன் கண்டதை எம்மால் காண முடிந்தது. அவர்கள் அத்தனை வெட்கத்துடன், அதனை தொடும்போது அவர்கள் எவ்வாறு தன்னுடைய சகோதரிக்கோ, தன்னுடைய தாய்க்கோ அல்லது தன்னுடைய தோழிக்கோ ஒரு pad-ஐ ஒரு கடையில் இருந்து அல்லது மருந்தகத்திலிருந்து பெற்றுத் தந்து தன்னுடைய உறவுக்கு எவ்வாறு அவர்கள் உதவப் போகிறார்கள்? என்பது, எங்களுக்கு, கேள்விக்குறியாகவே அன்று தோன்றியது. ஆகவே மாதவிடாய் சுகாதாரம் தொடர்பான விழிப்புணர்வு பெண் சார்ந்த அனைத்து சமூகத்தினருக்கும் கொடுத்தல் வேண்டும்.
இருபத்தியோராம் நூற்றாண்டில், காணப்படுகின்ற சமூகத்தினருக்கு, இதனை தெளிவுபடுத்துவது என்பது, இலகுவான விடயம் எனவே, நான் கருதுவேன். காரணம், இப்போது காணப்படுகின்ற இளம் சமுதாயத்தினர் Gen-z தலைமுறையை சேர்ந்தவர்கள்,
தொழில்நுட்ப வசதிகளுடன் சேர்ந்து செயல்படுகின்றது. ஆகவே, அவர்களிடம், இந்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது என்பது முடியுமாக இருக்கும் என நான் கருதுகின்றேன்.
மாதாவிடாய் என்பது சாதாரணமான விடயமாக பார்க்கப்பட வேண்டும். எங்களுடைய ஐதீக கதைகளை இந்த தலைமுறையினருக்கு செலுத்துவதன் மூலமாக எதுவும் கிடைக்கப் போவதில்லை. ஆகவே, இந்த ஐதீக கதைகள் மற்றும் இளம் தலைமுறை gen-z இடையில் காணப்படுகின்ற இடைவெளி மாதவிடாய் சுகாதாரத்தில் செல்வாக்கு செலுத்துகிறது.
மாதவிடாய் விழிப்புணர்வு – இதனால் சமத்துவத்தை பேண முடியும்
ஒரு கல்வி சமூகமாக அல்லது சுகாதார சமூகமாக எமது இந்த சமூகத்தை உயர்த்துவது என்பது எமது தலையாய கடமையாகும். ஆகவே எம்முடைய சமுதாயத்தை ஒட்டுமொத்தமாக வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்வதற்கு ஒரு திறவுகோளாக இந்த விடயம் அமையும்.”